பார்த்தேன், சிந்தித்தேன் - I

ஜூலை 21, 2008 at 3:25 பிற்பகல் (பகுக்கப்படாதது) (, , , )

வழக்கமாகச் சேனலுக்குச் சேனல் தாவுகிற நான் ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்ப்பதுண்டு. அப்படி ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியின் நீயா நானா. சில முறை அலர்ட் வைத்து இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தாலும் விளம்பர இடைவேளைகளில் சேனலை மாற்றிவிட்டு இந்த நிகழ்ச்சியைத் தவறவிட்டதும் உண்டு. ஆனால் இன்றைக்கு எடுத்துக் கொண்ட விஷயம் அதி முக்கியமான விஷயம் என்பதால் இன்று விளம்பரங்கள் உள்பட நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்தேன்.

 

இன்றைய நிகழ்ச்சியில் திருமணங்களில் பின்பற்றப்படும் சடங்குகளைக் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் நான் மிகவும் ரசித்தது “தாலி தேவையா தேவையில்லையா?” என்ற பகுதி. ஒரு பெண் திருமணமாகி ஏழாண்டுகளாக நான் தாலி அணிவதில்லை என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். அதற்கு அவர் கூறி காரணமும் ஏற்கத்தக்கதாக இருந்தது. கணவனை ஆத்ம ஸ்நேகிதனாகக் கருதுகிற எனக்கு தாலி என்பது வெறும் அலங்கார ஆபரணம் தான் என்று கூறினார்.

 

உயிரோடு கண் முன்னே இருக்கிற கணவனை விட ஒரு துண்டு தங்கம் எனக்குப் பெரிய விஷயமில்லை என்று ஒரு விவாத அரங்கில் வெளிப்படையாகக் கூறிய அவரது துணிச்சல் பாராட்டத் தக்கது. பழங்காலத்தில் பெண்ணைப் போலவே ஆணுக்கும் திருமணமானதன் அடையாளமாக பெண்கள் அணியும் மெட்டி போன்ற ஆபரணம் ஒன்று அணிவிக்கப்பட்டது. அதில் மெல்லிய ஒலி எழுப்பக் கூடிய சலங்கைகளும் இருக்கும். அவனை நம்பி ஒரு குடும்பம் இருப்பதால் அவன் உயிர் வாழ்வது மிகவும் அவசியமாக இருந்தது. பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் அவன் நடந்து வரும் வழியில் அந்த ஆபரணத்தின் ஒலியைக் கேட்டு விலகிப் போகும் என்பதால் ஆணுக்கும் அந்த ஆபரணம் அணிவிக்கப்பட்டது. இந்த ஆபரணம் இன்றளவும் சில ஜாதியாருடைய திருமணங்களில் அணிவிக்கப்பட்டாலும், திருமணம் முடிந்த இரண்டொரு நாளில் அந்த மணமகன்கள் அதை கழற்றிவிடுகின்றனர்.

 

திருமணமானவன் என்ற அடையாளத்தை மறைப்பதற்காக அல்லது தங்களுடைய வசதிக்காக ஆண்கள் இந்த ஆபரணத்தைக் கைவிட்டதை ஏற்றுக் கொள்ளும் சமூகம் ஏன் ஒரு பெண் அதைச் செய்யும் போது மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறது? அதே நிகழ்ச்சியில் “நீங்கள் மணமாகதவர் என்று நினைத்து மற்ற ஆண்கள் உங்களை அணுக மாட்டார்களா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்கள் எதிரணியினர். அந்தப் பெண் அதற்கும் அருமையாகப் பதிலளித்தார். “ஆண்களுக்குத் திருமணமானவர் என்பதற்கான விசேஷ அடையாளங்கள் ஏதும் இல்லாத போது அவர்கள் மட்டும் எப்படி அந்தக் கேள்வியை எதிர்கொள்கிறார்கள்?” என்று கேட்டு அவர்களை மடக்கினார்.

 

இப்படி ஒரு கேள்வியைக் கேட்ட அந்தக் கன்சர்வேட்டிவ்கள், கணவன் இறந்த பிறகு பலவந்தமாக தாலி அகற்றப்பட்டக் கைம்பெண்களையும் திருமணமாகாதவர் என்று நினைத்து மற்ற ஆண்கள் அணுகுகிற அபாயம் இருக்கிறது என்பதை ஏன் நினைத்துப் பார்க்கவில்லை? இதே அபாயங்களைத் தவிர்க்க ஒரு கைம்பெண் தன்னுடைய கணவன் கட்டிய தாலியை அகற்றாமல் வைத்திருந்தால் அதை மட்டும் ஏன் பூதக் கண்ணாடி வைத்துப் பெரிய குற்றமாகக் காட்டுகிறது இந்தக் கன்சர்வேட்டிவ் கூட்டம்.

 

மாப்பிள்ளை அழைப்பைக் குறித்து தங்களுக்கு இருந்த சங்கடங்களை சில இளைஞர்கள் வெளிப்படுத்திய போது ஒரு கண்சர்வேடிவ் பெண்மணி திருமணத்துக்கு வர முடியாதவர்கள், உதாரணமாக கைம்பெண்கள் உள்ளிட்டோர் அந்த மணமகனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக வைக்கப்படுவது தான் மாப்பிள்ளை அழைப்பு என்று ஒரு சப்பைக்கட்டு சமாதானத்தைச் சொன்னார். இதற்கு கோபி எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தக்கது. கைம்பெண்கள் மறைந்து நின்று தான் பார்க்க வேண்டுமா, ஏன் அந்தத் திருமண அரங்கத்துக்கே வந்து பார்க்கக் கூடாதா? என்று கேட்டார். அதற்கு கன்சர்வேடிவ்கள் பக்கமிருந்த ஒருவர், சடங்குகளிலும் விலக்கத் தக்கவை உண்டு, அதில் இதுவும் ஒன்று என்று ஒப்புக் கொண்டார்.

 

அந்த நிகழ்ச்சியில் ஒரு கைம்பெண்ணும் கலந்து கொண்டார். கணவனைப் பறிகொடுத்த ஒரே காரணத்துக்காக பல விசேஷங்களில் சம்பிரதாயங்களைக் காரணம் காட்டி ஒதுக்கப் படுவதைக் கூறினார். கன்சர்வேட்டிவ்களின் பக்கமிருந்து ஒரு பெண் தன்னுடைய திருமணத்தில் மற்றவர்கள் செய்யக் கூடிய சடங்குகளை அந்தக் கைம்பெண்ணையும் அழைத்து செய்ய வைப்பேன் என்று கூறினார். வரவேற்போம்.

 

நிகழ்ச்சியின் இரண்டாம் பாதியில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.பி.வி.எஸ். மணியன் என்பவர் கன்சர்வேடிவ்களின் பக்கம் சிறப்புப் பங்கேற்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். பல பேரைப் போல கோபியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் கலாச்சாரக் காவலர்களில் கூடாரம் என்று கருதிவிட்டார் போலிருக்கிறது.

 

கோபி கடைசியாய் சொன்ன பஞ்ச் மிகவும் நன்றாக இருந்தது, “வெறும் சடங்குகளைக் கட்டிக் கொண்டு வாழ்வதை விட, மனிதர்களைக் கட்டிக் கொண்டு வாழ்வதல்லவா வாழ்க்கை”. நிஜம் தானே!

நிரந்தர பந்தம் 6 மறுமொழிகள்

எனக்கு மட்டும் ஏன் இப்படி? - III

ஜூலை 19, 2008 at 2:32 நான் (நகைச்சுவை) (, , , )

சில நேரத்துல ஏந்தான் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குதுன்னு என்னை நெனச்சு நானே வருத்தப்படுறதுண்டு. காலம் பின்னாடி ஒனக்கு வட்டியும் மொதலுமா சேத்து வச்சுத் தரும்டான்னு என்னை நானே சமாதானம் பண்ணிக்குவேன். சனியனே, எதுக்குடா இந்த பில்டப்புன்னு குறுக்க புகுந்து லந்தக் குடுத்தா என்னோட ப்ளோ தடைபட்டுரும். அதுனால நான் சொல்லப் போற சமாச்சாரத்த எல்லாரு அமைதியா கேட்டுக்கனும், சொல்லிட்டேன்.

போன வாரம் நான் குடியிருக்கற வீட்டுச் சொந்தக்காரர் நாகி ரெட்டியோட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தேன். நாகி ரெட்டின்னா வாஹினி ஸ்டுடியோ ஓனரு கெடையாதுங்க, இவரு ராணுவத்துல மேஜரா இருந்து ரிட்டையரானவரு. இப்போ வீட்டுல மைனரா இருந்து லந்தக் குடுத்துக்கிட்டு இருக்காரான்னு எதிர்க் கேள்வி கேக்கப்படாது. அப்புறம் நான் சொல்ல வந்தத மறந்துடுவேன்.

நாங்க ரெண்டுபேரும் பேசிக்கிட்டிருந்தோமா, அப்போ அவங்க வீட்டம்மா அந்தப் பக்கமா போகவும் வரவுமா இருந்தாங்க. போயிட்டு வற்றேங்கன்னு சொல்லிட்டு நான் கெளம்பும் போது “இன்னிக்கு வெளிய எங்கயும் சாப்பிட வேண்டாம். உனக்கு நானே சாப்பாடு குடுத்துவுடுறேன்னு” சொல்லி அனுப்புனாங்க.

நானும் மதியம் 12:30 லேந்து இப்போ வரும் அப்புறம் வரும்னு காத்துக்கிட்டிருந்தேங்க. ஞாயித்துக் கெளமையாச்சா, ஆடு கோழி எதாச்சுமா இருக்கும்னு ரொம்ப ஆவலாக் காத்திருந்தேன். இப்பவும் சொல்றேன், நானாக்கூட கேக்கலிங்க, அவங்களாத் தான் குடுத்துவுடுறேன்னு சொன்னாங்க. இதை ஏன் சொல்றேன்னா பிற்காலத்துல என்னைப் பாத்து ஓசிச் சோத்துக்கு அலையிறவன்னு யாரும் தப்பா நெனச்சிறக் கூடாது பாருங்க. நமக்கு வரலாறு ரொம்ப முக்கியங்க, அதுக்காகத் தான் சொன்னேன்.

அப்படி இப்படின்னு மணி 3:30 ஆயிருச்சுங்க. ஆனா பாருங்க சாப்பாடு வந்து சேரலை. என்ன தான் நேர்ல போய்க் கேக்கத் தயக்கமா இருந்தாலும் அவங்க வீட்டு முன்னால குறுக்கயும் மறுக்கயும் போனா நம்மளப் பாத்த பெறகாவது ஞாபகம் வந்து குடுத்துவுடுவாங்கன்னு நெனச்சு கதவத் தொறந்துக்கிட்டு வெளிய வந்தேங்க. அவங்க வீட்டு வாசல்லயே ஒரு ”பகீர்” காத்திருந்துச்சு எனக்கு. அறுவது ரூவாய்க்கு மூணு சாவியோட தருவாங்க பாருங்க சைனா பூட்டு, அவங்க வீட்டுக் கதவுல அது பூட்டுன மானிக்கு தொங்குது.

மணி நாலாகப் போவுது, அந்த நேரத்துக்கு ”ஹைதராபாத் ஹவுஸ்” கூடத் தெறந்திருக்காது. ஹைதராபாத் ஹவுஸ்னா அது ஹைதராபாத் நிஜாமோட வீடான்னு நீங்கள்ளாம் ஏடா கூடமா கேக்கறதுக்கு முன்னாடி நானே சொல்லிடுறேன். ஹைதராபாத் ஹவுஸ்ங்கறது நம்ம ஊரு தலப்பாக்கட்டு பிரியாணிக் கடை மாதிரி ஒரு அசைவ ஓட்டலுங்க. அங்க கெடைக்கிற பிரியாணி கொஞ்சம் ஸ்பெஷல். 90 ரூபாய்க்கு வாங்குற சிக்கன் பிரியாணிய ரெண்டு வேளைக்கு சாப்பிடலாம். அவ்வளவு நெறைய இருக்கும். (சமீபத்திய பணவீக்கத்துல அந்த பார்சல் பிரியாணியோட வீக்கம் கொறஞ்சுருச்சுங்க. அதாவது அளவக் கொறைச்சுட்டாங்கன்னு சொல்றேன்.) மணி நாலாயிட்டதால அங்கயும் போக முடியலை.

மனசு நொந்து போய் வீட்டுக்குத் திரும்பி வந்துட்டேன். திருவிளையாடல் (தனுஷ் படம் கெடையாதுங்க, பழைய படம்) படத்துல பாணபத்திரர் சிவலிங்கத்து முன்னால விழுந்து கெடப்பாரே, பசி மயக்கத்துல அது மாதிரி படுத்துக் கெடந்தேன். அந்த மயக்கம் கொஞ்சம் போல தெளிஞ்சப்ப மணி ஆறாயிருந்துச்சு. இன்னொரு அரை மணிநேரம் காத்திருந்தா ஹைதராபாத் ஹவுசுக்கே போய் பார்சல் வாங்கலாம். ஆனா நடந்து போற அளவுக்குத் தாங்காதுங்கறதால வீட்டிலயே சோறாக்கலாம்னு முடிவு பண்ணி குக்கர்ல அரிசியை அளந்து கொட்டி ஒலைய வச்சேன். பதினாறு நிமிஷத்துல சோறு பூ மாதிரி வெந்து ரெடியாயிருச்சு. ஊத்திக்க தயிரு தான் இருந்துச்சு வீட்டுல. எனக்கு சுடு சோத்துல தயிரு ஊத்தி சாப்பிட்டுப் பழக்கமில்லையா அதுனால இன்னோரு அரை மணி நேரத்தத் தண்ணியக் குடிச்சுக்கிட்டே கடத்திட்டேன்.

ஒரு ஏழகால் மணிக்குப் பக்கமா, தட்டுல ரெண்டு கரண்டி சோத்த அள்ளிப் போட்டுத் அது மேல தயிர ஊத்தி, தொட்டுக்க கொஞ்சம் ஊறுகாய சைட்ல வச்சிக்கிட்டு டிவி முன்னாடி வந்து ஒக்காந்தேன். சோத்தப் பெசைஞ்சு ஒரு வாய் சாப்பிடல, காலிங் பெல் அடிச்சிருச்சு. மொதோ மாடில இருக்க என்னை வழக்கமா யாரும் காலிங் பெல்லடிச்சிக் கூப்பிட மாட்டாங்க. ஏன்னா இந்த ஊர்ல வீட்டுக்கு வந்து பாக்கற அளவுக்கு எனக்குத் தெரிஞ்சு யாரும் இல்லிங்க. என் வீட்டுல காலிங் பெல் எப்போ அடிச்சாலும் அது ஹவுஸ் ஓனரக் கூப்பிடத்தான் இருக்கும். தப்பா என் வீட்டு பெல்ல அடிச்சிருப்பாங்க. அப்படி நெனச்சுத் தான் கதவத் தொறந்தேன்.

கதவத்தெறந்தா, அங்க திருமதி ரெட்டி இருந்தாங்க, கையில சாப்பாட்டோடா. ஒன்னும் சொல்லாம என் கையில குடுத்துட்டுப் போயிட்டாங்க. ஆனா பாருங்க போறதுக்கு முன்னாடி கடன்காரனப் பாக்குற மாதிரி கேவலமா ஒரு பார்வை பாத்துட்டுப் போனாங்க. எதுக்காக அப்படிப் பாத்தாங்கன்னு யோசிச்சுக்கிட்டே நானும் டிவி முன்னாடி வந்து உக்காந்தேன். அப்பத்தான் கதவத் தெறக்கறதுக்கு முன்னாடி சோறு பெசைஞ்ச கையக் கழுவாமலே போய் நின்னது புத்திக்கு ஒரச்சுது.

பின் குறிப்பு: சோறு குடுத்துவுடுறேன்னு சொன்னவங்க மதியத்துக்கா ராத்திரிக்கான்னு சரியாச் சொல்லல. அதாகப்பட்டது இதுல என் தப்பு எதுவும் இல்லைன்னு சொல்றேன். இதை ஏன் சொல்றேன்னா “நமக்கு வரலாறு முக்கியம்”. பிற்காலத்துல அதுல எந்தத் தப்பும் நடந்துறக் கூடாது. இன்னொரு முக்கியமான விஷயம், அவங்க கொண்டு வந்து குடுத்த வெஜிடபிள் பிரியாணியும், சிக்கன் வருவலும் ரொம்ப நல்லா இருந்துச்சு.


புகைப்படம்: http://www.arusuvai.com

நிரந்தர பந்தம் 6 மறுமொழிகள்

சரியா? தவறா?

ஜூலை 12, 2008 at 1:22 நான் (பகுக்கப்படாதது) (, , , , )

கடந்த வாரம் சன் டிவி செய்திகளில் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி தம்பதியர் பற்றிய ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்தது. இவர்கள் இருவரும் பிரியப் போவதாக செய்தி ஏடுகளில் வந்த ஒரு செய்தி காரணமாகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குமுதம் நாளேடு புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் தந்தையாரிடம் பேட்டி கண்டு விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. கணவரின் குடும்பத்தினரை திருமதி அனிதா மதிப்பதில்லை என்றும் இதன் விளைவாக குப்புசாமி, அனிதா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. “இசைக் குடும்பத்தில் ஒரு அபஸ்வரம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த செய்திக்கு மறுப்பு அளிக்கும் விதமாகவே தம்பதியர் இருவரும் சன் டிவிக்கு பேட்டியளித்தனர்.

இந்த நிகழ்வில் கண்ணை உறுத்துகிற இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சம்பவம் ஒன்று, குமுதம் ஏடு குப்புசாமியின் தகப்பனார் சொன்ன அல்லது சொன்னதாகக் கூறப்படுகிற கருத்துக்களை மட்டும் வெளியிட்டது. குப்புசாமியின் தகப்பனாரைப் பேட்டி கண்டவுடன் இது குறித்துக் குப்புசாமியிடமும் கருத்து கேட்டிருக்கலாம். அவருடைய கருத்துக்களுடன் இந்தச் செய்தி வெளிவந்திருக்குமானால் செய்தியின் நம்பகத்தன்மை உறுதிப்பட்டிருக்கும்.

கண்ணை உறுத்தும் இரண்டாவது சம்பவம், குப்புசாமி தம்பதியர் சன் டிவியின் ஒளிப்பதிவுக் குழுவினரை படுக்கை அறை வரை அனுமதித்தது. குமுதத்தின் செய்தியை மறுக்க வேண்டும் என்பதற்காக குமுதம் செய்த அத்துமீறலுக்கு இணையான ஒரு அத்துமீறலை விரும்பி அனுமதித்தது தான் இந்த இரண்டாவது க.உ. சம்பவம். அந்த செய்திக் காட்சியில் இருவரும் இணைந்து பாடுவதற்கு ஒத்திகை செய்வது போலவும், சந்தோஷமாக உரையாடுவது போலவும் காட்சிகள் வந்தன. இவ்வளவும் அவர்கள் அறியாமல் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அல்ல. இருவரின் ஒப்புதலுடன் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் தான் அவை.குடும்பத்தில் இயல்பாய் நடக்கிற ஒரு சம்பவம் கூட கேமெராவுக்கு முன்னால் நிகழுமானால் அதையும் நடிப்பு என்று கருதுகிற அபாயம் இன்னும் இருக்கிறதல்லவா? சமூகத்தால் மதிக்கப்படுகிற ஒரு குடும்பத்திற்கு இது எப்படித் தெரியாமல் போனது?

குமுதம் வெளியிட்ட செய்தியில் திருமதி அனிதா தன் கணவரின் குடும்பத்தை மதிப்பதில்லை என்பதுதான் முக்கியமாகக் கூறப்பட்டிருந்தது. சன் டிவிக்கான செய்திப் பதிவில் தம்பதியர் இருவரும் இந்த விஷயத்தை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. இன்னும் சொல்வதானால் அதைப் பற்றி வாயே திறக்கவில்லை.

இன்று படுக்கை அறை வரை ஊடகத்தை அனுமதிக்கிற இவர்கள், நாளை ஊடகங்கள் இவர்களது அனுமதியில்லாமலே படுக்கை அறை வரை நுழைய முற்பட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வார்கள்?

நடந்தது சரியா, தவறா? படிக்கிற நீங்கள் தான் சொல்ல வேண்டும், பின்னூட்டங்கள் வாயிலாக.

புகைப்படம்: http://www.tamilonline.com

நிரந்தர பந்தம் 9 மறுமொழிகள்

கொலை வெறிக் கவிதைகள் 1754 - 3

ஜூலை 6, 2008 at 8:18 பிற்பகல் (நகைச்சுவை) (, , , , )

உரசிப் பார்த்தான்
பற்றவில்லை…

தடவிப் பார்த்தான்
வேலைக்காகலை…

இடித்துப் பார்த்தான்
எதிர்வினை இல்லை…

அவன்
ஜி.ஹெச்சில் கண்விழிக்குமுன்
கடைசியாப் பார்த்தது….

பிஞ்ச செருப்பு……

நிரந்தர பந்தம் 4 மறுமொழிகள்

கொலை வெறிக் கவிதைகள் 1754 - 2

ஜூலை 6, 2008 at 9:22 நான் (நகைச்சுவை) (, , , , , , )

அண்ணலும் நோக்கியா

அவளும் நோக்கியா

அவனிடம் N-72

அவளிடம் 6600.

இருவரும்

மறந்தும் கூடத்

திரும்பிப் பார்ப்பதில்லை

1100 வை.

(தற்காலக் காதலில் நிலவும் வர்க்க பேதத்தைக் குறித்து…)

நிரந்தர பந்தம் 5 மறுமொழிகள்

காக்கப்பட்டுள்ளது: கொலை வெறிக் கவிதைகள் 1754 - 1

ஜூன் 22, 2008 at 11:49 பிற்பகல் (நகைச்சுவை) (, , , , , , , )

இந்தப் பதிவு கடவுச்சொல் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டது. இதைப் பார்ப்பதற்கு தயவு செய்து கீழே உங்கள் கடவுச் சொல்லை உள்ளிடவும்:


நிரந்தர பந்தம் மறுமொழிகளைக் காண உங்கள் கடவுச்சொல்லைத் தாருங்கள்

பல்லேலக்கா பல்லேலக்கா - II

ஜூன் 22, 2008 at 4:54 பிற்பகல் (பகுக்கப்படாதது) (, , , , , , , , )

உலகப் புகழ் பெற்ற தஞ்சைப் பெரிய கோயில். இன்றளவும் நான் பார்த்து வியக்கும் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்று. இந்த கோயிலின் கோபுரத்தில் ஒரு வித்தியாசமான அம்சம் இருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான கோயில்கள் செவ்வக வடிவ அடித்தளத்துடன் உள்ள கோபுரங்களைக் கொண்டிருக்கும். இங்கே கோபுரத்தின் அடித்தளம் சதுர வடிவத்தில் இருக்கும்.

இது தஞ்சைக் கோயிலின் இரண்டாம் தோரண வாயில், முதலாம் தோரண வாயில் பிற்காலத்தில் சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டது. அதில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் இல்லாததால் அந்தப் படத்தைப் போடவில்லை.

தஞ்சை பெரியகோயிலின் மூண்றாம் தோரண வாயில்.

பெரியகோயிலின் வளர்ப்பு யானை வெள்ளையம்மா. இந்த யானையுடன் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் வழங்கப்பட்ட குந்தவை என்ற யானையும் வளர்ந்து வந்தது. உணவு ஒவ்வாமை காரணமாக சில வருடங்களுக்கு முன்பு குந்தவை யானை இறந்து போனது. என்னுடைய நண்பர்கள் சிலர் தோற்றத்தில் இருக்கும் ஒற்றுமையைக் கொண்டு வெள்ளையம்மாவை என்னுடைய அக்கா என்று கேலி செய்ததும் உண்டு.

இந்தச் சிலையில் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு தகவல் ஒளிந்துள்ளது. சிலையின் வலது காலுக்குக் கீழே ஒரு முதலை இருக்கிறது. அதை ஒரு யானை துதிக்கையால் இழுக்கிறது. அந்த யானையை ஒரு பாம்பு விழுங்குகிறது. அந்த பாம்பை இந்த வீரன் அடக்கிக் கொண்டிருக்கிறான். ஒரு யானையை விழுங்குகிற அளவுள்ள பெரிய பாம்பையே அடக்குகிறான் என்றால் அந்த வீரன் எவ்வளவு பலம் பொருந்தியவனாக இருக்க வேண்டும்? அந்த வீரனின் இரண்டு கைகளையும் பாருங்கள். இடது பக்கம் மேலே உள்ள கை உள்ளே செல்ல வழி காட்டுகிறது. வலது புறம் மேலே உள்ள கை உள்ளே என்னை விடவும் பிரம்மாண்டமான ஒன்று இருக்கிறது என்று வியப்பைக் காட்டும் வகையில் உள்ளதையும் கவனியுங்கள். இந்தத் தகவலை எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் தனது உடையார் நாவலில் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய கோயிலின் பிரம்மாண்டமான நந்தி. நந்தி மண்டபத்தின் மேற்கூரையில் மராத்தியர்கள் காலத்தில் வரையப்பட்ட தஞ்சை ஓவியங்கள். நந்திக்குப் பக்கத்தில் அபிஷேகம் செய்வதற்காக பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஏற்றி இறக்கக் கூடிய மேடை. கோயிலைக் கட்டியபோது நந்திக்கு மண்டபம் கட்டப்படவில்லை. பிற்காலத்தில் மராத்திய ஆட்சியில் கட்டப்பட்ட மண்டபம்தான் இது.

இது புதுச்சேரியில் உள்ள சுன்னாம்பாறு படகுத் துறை.

சுன்னாம்பாறு படகுத் துறையில் மரக் கிளைகளில் அமைக்கப்பட்டிருந்த மரவீடு.

தண்ணீரைக் கிழித்துக்கொண்டு கிளம்புகிறது படகு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அத்தை வீட்டில் விளையாடிய பல்லாங்குழி. இக்கால குழந்தைகளில் எத்தனை பேர் இந்த விளையாட்டை அறிதிருப்பார்கள் என்று தெரியவில்லை.

சென்னை இளைஞர்களின் பாடல் பெற்ற ஸ்தலம், ஸ்பென்சர். இங்குதான் நான் இதற்கு முன்பு பணிபுரிந்த அலுவலகம் இருக்கிறது. சில நாள் எல்.ஐ.சி. பேருந்து நிறுத்தம் வரை செல்ல சோம்பல் பட்டு இந்த சிக்னலின் அருகிலேயே காத்திருந்து சிக்னலுக்கு நிற்கும் 21 அல்லது 27-D யில் வீட்டுக்குச் சென்றதுண்டு.

பெருகி ஓடும் கொள்ளிடம் (பொன்னியின் செல்வனில் படித்திருப்பீர்களே, அதே கொள்ளிடம் தான்). கைப்பிடிச் சுவரில் மாலை நேரக் காற்று வாங்கும் பெருசுகள். பேருந்தின் உள்ளிருந்து எடுத்தது.

கொள்ளிடம் பாலத்தில் கண்ட நடுவயதுக் காதல். இந்தக் காட்சியைப் பார்க்கும் போது வாலியின் ஒரு கவிதை ஞாபகம் வந்தது. “நாற்பதில் வரும் காதல் தோற்பதில்லை, முக்கியமாய் இனக் கவர்ச்சியை அது ஏற்பதில்லை”.

”ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே” பாடிவிட்டு வந்த இந்த பயணத் தொடரில் இன்னும் ஒரு பதிவு மீதம் இருக்கிறது. விரைவில் அதுவும் வலையேறும்.

நிரந்தர பந்தம் 1 மறுமொழி

எனக்கு மட்டும் ஏன் இப்படி - II

ஜூன் 17, 2008 at 1:41 நான் (நகைச்சுவை, பகுக்கப்படாதது) (, , , , , )

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமா மற்றும் மெக்கெய்ன் ஆகியோரின் பெயரில் வந்த ஆணுறைகள் விற்பனையில் சக்கைபோடு போடுவதைக் குறித்து சேவியர் அவர்கள் ஒரு பதிவு எழுதியிருந்தார். இந்த தேர்தல் நேர நகைச்சுவையில் அவர் சொல்லாமல் விட்ட ஒரு சுவாரசியமான விஷயமும் உண்டு. அவரும் அதைக் குறித்து ஆர்வமாகக் கேட்டிருந்தார். அதற்காகவே இந்த பதிவு. கடந்த வாரம் தற்செயலாக சி.என்.என். ஐ.பி.என். செய்திகளைப் பார்த்தபோது இந்த சமாச்சாரம் தெரிய வந்தது.

விஷயம் வேறொன்றும் இல்லை. ஹிலாரி கிளிண்டன் வடிவத்தில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனையாகின்ற பாக்குவெட்டிகளைக் குறித்த செய்திதான் அது.

ஈகிள்வியூ என்ற அமெரிக்க நிறுவனம் இந்த பாக்குவெட்டியைத் தாயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. அந்நிறுவனம் இந்தப் பாக்கு வெட்டிக்கு காப்புரிமை கோரியும் விண்ணப்பித்துள்ளது. இந்தப் பாக்கு வெட்டிகளை விளம்பரப்படுத்த தனியாக ஒரு வலைத்தளத்தையும் அந்நிறுவனத்தினர் துவங்கியுள்ளனர்.

ஹிலாரி வடிவத்தில் செய்யப்பட்டுள்ள பாக்கு வெட்டியைப் பற்றி ஜார்ஜ் புஷ், அர்னால்ட், ஜான் மெக்கெய்ன், பாரக் ஒபாமா, பில் கிளிண்டன் உள்ளிட்ட அமெரிக்கப் பிரபலங்களின் கருத்துக்களையும் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளனர் (எல்லாம் தள நிர்வாகிகளின் கற்பனைதான்). வால் பேப்பர்கள் மற்றும் பாடல்களுடன் அமர்க்களப்படுத்துகிறது தளம். தளத்துக்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

நிற்க. இதை எதற்காக இவன் “எனக்கு மட்டும் ஏன் இப்படி - II” ஆக பதிவு செய்தான் என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம். முன்பே சொல்லியிருக்கிறேன் ஊரே ஒரு விதமாக சிந்தித்தாலும் என்னுடைய சிந்தனை வேறு விதமாக இருக்கும் என்று. அதை மனதில் வைத்துக்கொண்டு தொடர்ந்து படிக்கவும்.

இந்தப் பாக்குவெட்டியைக் கண்டவுடன் எனக்கு வந்த விவகாரமான சிந்தனையை சொன்னால் காரைக்குடிப் பக்கம் இந்த ஜென்மத்தில் நான் கால்வைக்க முடியாது. எனக்குப் பெண் கொடுக்கும் உறவுமுறையில் அங்கே யாரும் இல்லை என்பதால் துணிந்து சொல்கிறேன். நம் ஊர் பிரபலங்களில் யாரையாவது வைத்து இது போன்ற பாக்குவெட்டியைத் தயாரிக்க வேண்டுமென்றால் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற கோணத்தில் யோசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் நேற்றைய காலைச் செய்திகளில் கேட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டைப் பற்றிய ஒரு பிரபலத்தின் பேச்சு நினைவுக்கு வந்தது. அந்த பிரபலம் யார் என்பதை மேலே உள்ள தொடுப்பைச் சொடுக்கி நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

விவகாரமான சிந்தனை இதோடு முடிந்துவிடவில்லை. இன்னும் இருக்கிறது. வி.சி. ஒன்றைவிடவும் வி.சி. இரண்டினால் எனக்கு பெரிய ஆபத்துகள் ஏற்படலாம். இருந்தாலும் ஹைதராபாதில் இருப்பதாலும் மீண்டும் ஊருக்குச் செல்ல சில மாதங்கள் ஆகும் என்பதாலும் எனது பாதுகாப்புக்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்படாது என்றே நம்புகிறேன்.

வி.சி. இரண்டு இதோ உங்கள் பார்வைக்கு: ஹிலாரி அம்மாவாவது பேண்ட் போடுறவங்க. இவரு வேட்டிதானே கட்டுவாரு, அப்புறம் பாக்க எங்க வச்சு ஒடைக்கிறது?

நிரந்தர பந்தம் 10 மறுமொழிகள்

பல்லேலக்கா பல்லேலக்கா - I

ஜூன் 9, 2008 at 12:35 பிற்பகல் (பகுக்கப்படாதது) (, , )

பல்லேலக்கா என்ற தெலுங்குச் சொல்லுக்கு ”கிராமத்து மனிதன்” என்பதுதான் பொருள் என்று என் தெலுங்கு நண்பர் ஒருவர் சொன்னார். சொல்லப் போனால் நானும் ஒரு கிராமத்து மனிதன்தான். சென்னை நகரின் பரபரப்பு மிகுந்த திருவல்லிக்கேணி கோஷாஸ்பத்திரியில் முதன்முதலாக கண்விழித்திருந்தாலும் இருபது வருடங்களுக்கு மேல் வாழ்ந்ததெல்லாம் தஞ்சாவூரில்தான். தஞ்சையின் நகரப் பகுதியில் வாழ்ந்தாலும் அன்றாடம் கிராமத்து மனிதர்களை தினந்தோறும் சந்தித்திருக்கிறேன். அந்த வகையில் நானும் ஒரு பல்லேலக்கா. இனி நான் சென்று வந்த பயணத்தைக் குறித்து…

மொத்த பயண தூரம்: 2,850 (பயணத்தில் சில ஊர்களைத் தவிர்த்துவிட்டதால் தூரம் கொஞ்சம் குறைந்துவிட்டது.)

சந்தித்த/உரையாடிய பதிவர்கள்: தோழர் மதிமாறன் அவர்களை மட்டும்தான் நேரில் சந்திக்க முடிந்தது. சென்னையிலேயே அதிககாலம் வாழ்ந்தாலும் இதுவரை “அம்பேத்கர் நினைவில்லம்” செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை மதிமாறன் அவர்களுடன் சென்று பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து நான் வசித்த பட்டினப்பாக்கம் பகுதியில் ஒரு மணிநேரம் இணையத்தில் உலாவினோம். பின்னர் மெரீனா கடற்கரையில் சிறிது நேரம் உரையாடினோம். மழை குறுக்கிட்டதால் மிகவும் குறுகிய நேரத்திலேயெ சந்திப்பை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம். மூண்று மணிநேரத்திலேயே முடிந்துவிட்டது.

பின்னர் என் அன்பு மாமன் லதானந்த் அவர்களுடனும் திரு. சேவியர் அவர்களுடனும் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. எனது பயணத் திட்டத்தில் இருவரையும் சந்திக்க எண்ணியிருந்தபோதும் கடைசியில் அது முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான்.

வாங்கிய/சுட்ட/பரிசாக மற்றும் பண்டமாற்றில் பெற்ற புத்தகங்கள்: நல்ல புத்தகத்தை எங்கே பார்த்தாலும் அதை விட்டுவைக்கிற பழக்கம் எனக்கில்லை. முடிந்தால் அதை வைத்திருப்பவரிடம் கேட்டு வாங்கிவிடுவேன் இல்லையெனில் திருடிவிடுவேன். முதலில், வாங்கிய புத்தகங்களைப் பற்றி சொல்லுகிறேன். பாரதிய ஜனதா பார்ட்டி, வே. மதிமாறன் பதில்கள், சிரிப்பு டாக்டர் மற்றும் நடிகர் சிவகுமாரின் “இது ராஜபாட்டை அல்ல”. முதல் இரண்டு புத்தகங்களுக்கும் ஒரு சிறப்பு உண்டு, அவற்றை எழுதிய திரு. மதிமாறனிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொண்டதுதான் அந்த சிறப்பு. ”சிரிப்பு டாக்டர்” கலைவாணர் என்.எஸ். கிருஷ்னன் அவர்களைப் பற்றியது. இந்த புத்தகத்தை வாங்கியதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் இதை வாங்கியது தஞ்சாவூரில் உள்ள ஒரு வெற்றிலை பாக்குக் கடையில். ரூபாய் எழுபது மதிப்புள்ள இந்த புத்தகத்தை வெற்றிலை பாக்கு, மற்றும் சர்பத் விற்கும் ஒரு கடைகள் மூலமாகக் கூட விற்பனை செய்வது கிழக்கு பதிப்பகத்தின் நல்ல மார்கெட்டிங் உத்தி. ஊர் திரும்புவதற்காக சென்னை வந்த போது மயிலாப்பூர் அல்லையன்ஸ் பதிப்பகத்தில் வாங்கியது நடிகர் சிவகுமாரின் ”இது ராஜபாட்டை அல்ல” புத்தகம்.

சுட்ட புத்தகங்களின் வரிசையில் முதலில் வருவது என் தந்தையாரின் கலெக்‌ஷனிலிருந்து சுட்ட ஷிவ் கேரா அவர்களின் “You Can Win” நூலின் தமிழாக்கம். என் அத்தையின் கலெக்‌ஷனிலிருந்து சுட்டது சோம. வள்ளியப்பன் அவர்களின் ”இட்லியாக இருங்கள்” புத்தகம்.

அடுத்து வருவது பரிசாகப் பெற்ற புத்தகங்கள். சென்னையில் என்னுடைய நண்பன் கார்த்தி இரண்டு புத்தகங்களைப் பரிசாகத் தந்தான். அந்த இரண்டு புத்தகங்களின் பெயரையும் சொன்னால் என் மரியாதை டோட்டல் டேமேஜாகிவிடும் என்பதால் அதனைத் தவிர்த்துவிடுகிறேன்.

தொடர்ந்து வருவது பண்டமாற்றாகப் பெற்ற புத்தகம். பாரதிய ஜனதா பார்ட்டி புத்தகத்தை என்னுடைய பயணத்தின்போதே முழுவதுமாக படித்து முடித்துவிட்டதால் என் அத்தையிடம் அதற்கு பண்டமாற்றாகப் பெற்றுக்கொண்டது திராவிடக் கழக வெளியீடான “அசல் மனுதரும சாஸ்திரம்”. 1919ல் வெளிவந்த நூலில் திரு கி. வீரமணி அவர்களின் ஆய்வுரையுடன் கூடிய மறுபதிப்பு அது.

புத்தகங்களைப் பற்றி சொல்லும்போது இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். அல்லையன்ஸ் பதிப்பகத்தில் நான் வாங்க நினைத்த இரண்டு புத்தகங்கள் கிடைக்கவில்லை. துக்ளக் ஆசிரியர் சோவின் “யாருக்கும் வெட்கமில்லை” புத்தகத்தை ஐ.ஏ.எஸ். பாடத் திட்டத்தில் வைத்திருந்ததாகக் கேள்வி. அதில் அப்படி என்னதான் இருக்கிறது, வாங்கிப் பார்ப்போம் என்று நினைத்தேன். ஆனால் அந்த புத்தகம் ஸ்டாக் இல்லையாம். இன்னொன்று காண்டேகர் எழுதிய ஒரு நூல். பெயர் “க்ரௌஞ்ச வதம்” என்று நினைக்கிறேன். பல பிரபலங்கள் இந்த நூலைச் சிலாகித்துச் சொன்னதால் அதையும் வாங்கலாம் என்று நினைத்தேன். அதுவும் அங்கே கிடைக்கவில்லை.

சுற்றிய இடங்கள்: தஞ்சாவூருக்கு சென்று பெரிய கோயிலைப் பார்க்காமல் வரமுடியுமா? அங்கே சென்றதன் நினைவாக சில சிற்பங்களை புகைப்படம் எடுத்து வந்தேன். என்னை அழைத்துச் செல்வதாக சொன்ன நண்பன் அந்தி மசங்கிய பிறகு வந்து சேர்ந்ததால் சூரிய வெளிச்சம் போவதற்குள் சில படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் அங்கே விற்பனைக்கு வைத்திருந்த சில படங்களை வாங்கி வந்துள்ளேன்.

பாண்டிச்சேரியில் என் இரண்டு அத்தைகளின் குடும்பத்துடன் ”சுன்னாம்பாறு” கழிமுகத்துக்கும் சென்று வந்தேன். போய் வந்ததில் நான் கற்றுக் கொண்ட ஒரு பாடம், இது போன்ற இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லக் கூடாது என்பதுதான். ஏன் சொல்லுகிறேன் என்று பலருக்கும் புரிந்திருக்கும்.

மேற்சொன்ன இரு இடங்களிலும் எடுத்த படங்களை பல்லேலக்கா பல்லேலக்கா - II ல் பதிப்பிக்கிறேன். அதுவரை பொறுமை காக்கவும்.

கடைசியாக ஊர் திரும்புமுன் மூண்று மணிநேரம் நான் வசித்த மயிலாப்பூர் பட்டினப்பாக்கம் பகுதிகளில் சுற்றினேன். சில வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த இடங்களுக்கு சென்று வருவதென்றால் யாருக்குத்தான் கசக்கும்.

நதிகள்: எங்கள் ஊர் ஆறுகளுக்கு ஜூன் மாதம் என்பது திருவிழாக் காலம். ஜூன் 12ல் ஆண்டு தோறும் மேட்டூர் அணை திறக்கப் படும். 12ம் தேதியே திறக்கப் பட்டாலும் கடைமடைக்குப் பக்கத்தில் உள்ள எங்கள் ஊருக்கு தண்ணீர் வந்து சேர 16 தேதி ஆகிவிடும். 15ம் தேதியே நான் புறப்பட்டுவிட்டதால் நிறை பெருக்காக எங்கள் ஆறுகளைப் பார்க்க இயலவில்லை. ஆனாலும் பயணங்களின் போது கொள்ளிடத்தில் மற்ற ஆறுகளிலும் இரு கரையையும் தொட்டுத் தண்ணீர் ஓடியது கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது.

கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருந்த மற்ற சமாச்சாரங்களையும் புகைப்படங்களையும் இதன் தொடர்ச்சியில் பதிப்பிக்கிறேன். இப்போதைக்கு அப்பீட்டு, அடுத்த பாகத்தில ரிப்பீட்டு. வரட்டுமா….

நிரந்தர பந்தம் 11 மறுமொழிகள்

நெடும் பயணம்…

மே 30, 2008 at 3:35 பிற்பகல் (பகுக்கப்படாதது)

அன்பானவர்களே,

வணக்கம். ஏறக் குறைய ஐந்து மாதங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்வதால் அடுத்த பதினைந்து நாட்களில் சில தாமதங்களை எதிர்பார்க்கலாம். கிட்டத் தட்ட மூவாயிரம் கிலோமீட்டர் பயணம் என்பதால் எங்கெங்கே இணைய வசதி கிடைக்கும் என்று சொல்ல இயலாது. தங்களுடைய மறுமொழிகள் நீண்ட நேரம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கலாம். இதுபோன்ற வசதிக்குறைவுகளை அருள் கூர்ந்து பொறுத்தருள வேண்டுகிறேன்.

எழுத்தில் விருப்பமுள்ளவர்களுக்கு பயணம் எப்போதும் சுகமானதாகவே இருக்கும். எனக்கும் அப்படித்தான். வரும்போது கை நிறைய அள்ளி வருவேன், உங்களோடு பகிர்ந்து கொள்ள. என் தஞ்சை மாவட்டத்தின் சுவையான சம்பவங்களுடனும், புகைப்படங்களுடனும் விரைவில் உங்களை சந்திக்க உள்ளேன். போய் வருகிறேன்.

மீண்டும் ஒருமுறை அசௌகரியங்களுக்காக முன்கூட்டியே வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன்,

விஜய்கோபால்சாமி.

நிரந்தர பந்தம் 1 மறுமொழி

« முந்தைய இடுகைகள்