பல்லேலக்கா பல்லேலக்கா – II

4:54 பிப இல் ஜூன் 22, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்
குறிச்சொற்கள்: , , , , , , , ,

உலகப் புகழ் பெற்ற தஞ்சைப் பெரிய கோயில். இன்றளவும் நான் பார்த்து வியக்கும் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்று. இந்த கோயிலின் கோபுரத்தில் ஒரு வித்தியாசமான அம்சம் இருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான கோயில்கள் செவ்வக வடிவ அடித்தளத்துடன் உள்ள கோபுரங்களைக் கொண்டிருக்கும். இங்கே கோபுரத்தின் அடித்தளம் சதுர வடிவத்தில் இருக்கும்.

இது தஞ்சைக் கோயிலின் இரண்டாம் தோரண வாயில், முதலாம் தோரண வாயில் பிற்காலத்தில் சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டது. அதில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் இல்லாததால் அந்தப் படத்தைப் போடவில்லை.

தஞ்சை பெரியகோயிலின் மூண்றாம் தோரண வாயில்.

பெரியகோயிலின் வளர்ப்பு யானை வெள்ளையம்மா. இந்த யானையுடன் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் வழங்கப்பட்ட குந்தவை என்ற யானையும் வளர்ந்து வந்தது. உணவு ஒவ்வாமை காரணமாக சில வருடங்களுக்கு முன்பு குந்தவை யானை இறந்து போனது. என்னுடைய நண்பர்கள் சிலர் தோற்றத்தில் இருக்கும் ஒற்றுமையைக் கொண்டு வெள்ளையம்மாவை என்னுடைய அக்கா என்று கேலி செய்ததும் உண்டு.

இந்தச் சிலையில் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு தகவல் ஒளிந்துள்ளது. சிலையின் வலது காலுக்குக் கீழே ஒரு முதலை இருக்கிறது. அதை ஒரு யானை துதிக்கையால் இழுக்கிறது. அந்த யானையை ஒரு பாம்பு விழுங்குகிறது. அந்த பாம்பை இந்த வீரன் அடக்கிக் கொண்டிருக்கிறான். ஒரு யானையை விழுங்குகிற அளவுள்ள பெரிய பாம்பையே அடக்குகிறான் என்றால் அந்த வீரன் எவ்வளவு பலம் பொருந்தியவனாக இருக்க வேண்டும்? அந்த வீரனின் இரண்டு கைகளையும் பாருங்கள். இடது பக்கம் மேலே உள்ள கை உள்ளே செல்ல வழி காட்டுகிறது. வலது புறம் மேலே உள்ள கை உள்ளே என்னை விடவும் பிரம்மாண்டமான ஒன்று இருக்கிறது என்று வியப்பைக் காட்டும் வகையில் உள்ளதையும் கவனியுங்கள். இந்தத் தகவலை எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் தனது உடையார் நாவலில் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய கோயிலின் பிரம்மாண்டமான நந்தி. நந்தி மண்டபத்தின் மேற்கூரையில் மராத்தியர்கள் காலத்தில் வரையப்பட்ட தஞ்சை ஓவியங்கள். நந்திக்குப் பக்கத்தில் அபிஷேகம் செய்வதற்காக பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஏற்றி இறக்கக் கூடிய மேடை. கோயிலைக் கட்டியபோது நந்திக்கு மண்டபம் கட்டப்படவில்லை. பிற்காலத்தில் மராத்திய ஆட்சியில் கட்டப்பட்ட மண்டபம்தான் இது.

இது புதுச்சேரியில் உள்ள சுன்னாம்பாறு படகுத் துறை.

சுன்னாம்பாறு படகுத் துறையில் மரக் கிளைகளில் அமைக்கப்பட்டிருந்த மரவீடு.

தண்ணீரைக் கிழித்துக்கொண்டு கிளம்புகிறது படகு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அத்தை வீட்டில் விளையாடிய பல்லாங்குழி. இக்கால குழந்தைகளில் எத்தனை பேர் இந்த விளையாட்டை அறிதிருப்பார்கள் என்று தெரியவில்லை.

சென்னை இளைஞர்களின் பாடல் பெற்ற ஸ்தலம், ஸ்பென்சர். இங்குதான் நான் இதற்கு முன்பு பணிபுரிந்த அலுவலகம் இருக்கிறது. சில நாள் எல்.ஐ.சி. பேருந்து நிறுத்தம் வரை செல்ல சோம்பல் பட்டு இந்த சிக்னலின் அருகிலேயே காத்திருந்து சிக்னலுக்கு நிற்கும் 21 அல்லது 27-D யில் வீட்டுக்குச் சென்றதுண்டு.

பெருகி ஓடும் கொள்ளிடம் (பொன்னியின் செல்வனில் படித்திருப்பீர்களே, அதே கொள்ளிடம் தான்). கைப்பிடிச் சுவரில் மாலை நேரக் காற்று வாங்கும் பெருசுகள். பேருந்தின் உள்ளிருந்து எடுத்தது.

கொள்ளிடம் பாலத்தில் கண்ட நடுவயதுக் காதல். இந்தக் காட்சியைப் பார்க்கும் போது வாலியின் ஒரு கவிதை ஞாபகம் வந்தது. “நாற்பதில் வரும் காதல் தோற்பதில்லை, முக்கியமாய் இனக் கவர்ச்சியை அது ஏற்பதில்லை”.

”ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே” பாடிவிட்டு வந்த இந்த பயணத் தொடரில் இன்னும் ஒரு பதிவு மீதம் இருக்கிறது. விரைவில் அதுவும் வலையேறும்.

1 பின்னூட்டம் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. பயணத்தொடர் – பெரும்பயணத் தொடராயிருக்கு.

    நல்ல தகவல்கள் – உடையாரில் இருந்து கூட.


பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.