எனக்கு மட்டும் ஏன் இப்படி? – III

2:32 முப இல் ஜூலை 19, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 8 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

சில நேரத்துல ஏந்தான் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குதுன்னு என்னை நெனச்சு நானே வருத்தப்படுறதுண்டு. காலம் பின்னாடி ஒனக்கு வட்டியும் மொதலுமா சேத்து வச்சுத் தரும்டான்னு என்னை நானே சமாதானம் பண்ணிக்குவேன். சனியனே, எதுக்குடா இந்த பில்டப்புன்னு குறுக்க புகுந்து லந்தக் குடுத்தா என்னோட ப்ளோ தடைபட்டுரும். அதுனால நான் சொல்லப் போற சமாச்சாரத்த எல்லாரு அமைதியா கேட்டுக்கனும், சொல்லிட்டேன்.

போன வாரம் நான் குடியிருக்கற வீட்டுச் சொந்தக்காரர் நாகி ரெட்டியோட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தேன். நாகி ரெட்டின்னா வாஹினி ஸ்டுடியோ ஓனரு கெடையாதுங்க, இவரு ராணுவத்துல மேஜரா இருந்து ரிட்டையரானவரு. இப்போ வீட்டுல மைனரா இருந்து லந்தக் குடுத்துக்கிட்டு இருக்காரான்னு எதிர்க் கேள்வி கேக்கப்படாது. அப்புறம் நான் சொல்ல வந்தத மறந்துடுவேன்.

நாங்க ரெண்டுபேரும் பேசிக்கிட்டிருந்தோமா, அப்போ அவங்க வீட்டம்மா அந்தப் பக்கமா போகவும் வரவுமா இருந்தாங்க. போயிட்டு வற்றேங்கன்னு சொல்லிட்டு நான் கெளம்பும் போது “இன்னிக்கு வெளிய எங்கயும் சாப்பிட வேண்டாம். உனக்கு நானே சாப்பாடு குடுத்துவுடுறேன்னு” சொல்லி அனுப்புனாங்க.

நானும் மதியம் 12:30 லேந்து இப்போ வரும் அப்புறம் வரும்னு காத்துக்கிட்டிருந்தேங்க. ஞாயித்துக் கெளமையாச்சா, ஆடு கோழி எதாச்சுமா இருக்கும்னு ரொம்ப ஆவலாக் காத்திருந்தேன். இப்பவும் சொல்றேன், நானாக்கூட கேக்கலிங்க, அவங்களாத் தான் குடுத்துவுடுறேன்னு சொன்னாங்க. இதை ஏன் சொல்றேன்னா பிற்காலத்துல என்னைப் பாத்து ஓசிச் சோத்துக்கு அலையிறவன்னு யாரும் தப்பா நெனச்சிறக் கூடாது பாருங்க. நமக்கு வரலாறு ரொம்ப முக்கியங்க, அதுக்காகத் தான் சொன்னேன்.

அப்படி இப்படின்னு மணி 3:30 ஆயிருச்சுங்க. ஆனா பாருங்க சாப்பாடு வந்து சேரலை. என்ன தான் நேர்ல போய்க் கேக்கத் தயக்கமா இருந்தாலும் அவங்க வீட்டு முன்னால குறுக்கயும் மறுக்கயும் போனா நம்மளப் பாத்த பெறகாவது ஞாபகம் வந்து குடுத்துவுடுவாங்கன்னு நெனச்சு கதவத் தொறந்துக்கிட்டு வெளிய வந்தேங்க. அவங்க வீட்டு வாசல்லயே ஒரு ”பகீர்” காத்திருந்துச்சு எனக்கு. அறுவது ரூவாய்க்கு மூணு சாவியோட தருவாங்க பாருங்க சைனா பூட்டு, அவங்க வீட்டுக் கதவுல அது பூட்டுன மானிக்கு தொங்குது.

மணி நாலாகப் போவுது, அந்த நேரத்துக்கு ”ஹைதராபாத் ஹவுஸ்” கூடத் தெறந்திருக்காது. ஹைதராபாத் ஹவுஸ்னா அது ஹைதராபாத் நிஜாமோட வீடான்னு நீங்கள்ளாம் ஏடா கூடமா கேக்கறதுக்கு முன்னாடி நானே சொல்லிடுறேன். ஹைதராபாத் ஹவுஸ்ங்கறது நம்ம ஊரு தலப்பாக்கட்டு பிரியாணிக் கடை மாதிரி ஒரு அசைவ ஓட்டலுங்க. அங்க கெடைக்கிற பிரியாணி கொஞ்சம் ஸ்பெஷல். 90 ரூபாய்க்கு வாங்குற சிக்கன் பிரியாணிய ரெண்டு வேளைக்கு சாப்பிடலாம். அவ்வளவு நெறைய இருக்கும். (சமீபத்திய பணவீக்கத்துல அந்த பார்சல் பிரியாணியோட வீக்கம் கொறஞ்சுருச்சுங்க. அதாவது அளவக் கொறைச்சுட்டாங்கன்னு சொல்றேன்.) மணி நாலாயிட்டதால அங்கயும் போக முடியலை.

மனசு நொந்து போய் வீட்டுக்குத் திரும்பி வந்துட்டேன். திருவிளையாடல் (தனுஷ் படம் கெடையாதுங்க, பழைய படம்) படத்துல பாணபத்திரர் சிவலிங்கத்து முன்னால விழுந்து கெடப்பாரே, பசி மயக்கத்துல அது மாதிரி படுத்துக் கெடந்தேன். அந்த மயக்கம் கொஞ்சம் போல தெளிஞ்சப்ப மணி ஆறாயிருந்துச்சு. இன்னொரு அரை மணிநேரம் காத்திருந்தா ஹைதராபாத் ஹவுசுக்கே போய் பார்சல் வாங்கலாம். ஆனா நடந்து போற அளவுக்குத் தாங்காதுங்கறதால வீட்டிலயே சோறாக்கலாம்னு முடிவு பண்ணி குக்கர்ல அரிசியை அளந்து கொட்டி ஒலைய வச்சேன். பதினாறு நிமிஷத்துல சோறு பூ மாதிரி வெந்து ரெடியாயிருச்சு. ஊத்திக்க தயிரு தான் இருந்துச்சு வீட்டுல. எனக்கு சுடு சோத்துல தயிரு ஊத்தி சாப்பிட்டுப் பழக்கமில்லையா அதுனால இன்னோரு அரை மணி நேரத்தத் தண்ணியக் குடிச்சுக்கிட்டே கடத்திட்டேன்.

ஒரு ஏழகால் மணிக்குப் பக்கமா, தட்டுல ரெண்டு கரண்டி சோத்த அள்ளிப் போட்டுத் அது மேல தயிர ஊத்தி, தொட்டுக்க கொஞ்சம் ஊறுகாய சைட்ல வச்சிக்கிட்டு டிவி முன்னாடி வந்து ஒக்காந்தேன். சோத்தப் பெசைஞ்சு ஒரு வாய் சாப்பிடல, காலிங் பெல் அடிச்சிருச்சு. மொதோ மாடில இருக்க என்னை வழக்கமா யாரும் காலிங் பெல்லடிச்சிக் கூப்பிட மாட்டாங்க. ஏன்னா இந்த ஊர்ல வீட்டுக்கு வந்து பாக்கற அளவுக்கு எனக்குத் தெரிஞ்சு யாரும் இல்லிங்க. என் வீட்டுல காலிங் பெல் எப்போ அடிச்சாலும் அது ஹவுஸ் ஓனரக் கூப்பிடத்தான் இருக்கும். தப்பா என் வீட்டு பெல்ல அடிச்சிருப்பாங்க. அப்படி நெனச்சுத் தான் கதவத் தொறந்தேன்.

கதவத்தெறந்தா, அங்க திருமதி ரெட்டி இருந்தாங்க, கையில சாப்பாட்டோடா. ஒன்னும் சொல்லாம என் கையில குடுத்துட்டுப் போயிட்டாங்க. ஆனா பாருங்க போறதுக்கு முன்னாடி கடன்காரனப் பாக்குற மாதிரி கேவலமா ஒரு பார்வை பாத்துட்டுப் போனாங்க. எதுக்காக அப்படிப் பாத்தாங்கன்னு யோசிச்சுக்கிட்டே நானும் டிவி முன்னாடி வந்து உக்காந்தேன். அப்பத்தான் கதவத் தெறக்கறதுக்கு முன்னாடி சோறு பெசைஞ்ச கையக் கழுவாமலே போய் நின்னது புத்திக்கு ஒரச்சுது.

பின் குறிப்பு: சோறு குடுத்துவுடுறேன்னு சொன்னவங்க மதியத்துக்கா ராத்திரிக்கான்னு சரியாச் சொல்லல. அதாகப்பட்டது இதுல என் தப்பு எதுவும் இல்லைன்னு சொல்றேன். இதை ஏன் சொல்றேன்னா “நமக்கு வரலாறு முக்கியம்”. பிற்காலத்துல அதுல எந்தத் தப்பும் நடந்துறக் கூடாது. இன்னொரு முக்கியமான விஷயம், அவங்க கொண்டு வந்து குடுத்த வெஜிடபிள் பிரியாணியும், சிக்கன் வருவலும் ரொம்ப நல்லா இருந்துச்சு.


புகைப்படம்: http://www.arusuvai.com

8 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. இதெல்லாம் நேரக்கெடு. எழுதரவனுக்கும் சரி.படிக்கிரவனுக்கும் சரி. எதாவது உருப்படியா பண்ணுங்க சார்.

  2. ஏதாவது பாராட்டி இரண்டொரு வார்த்தை எழுதலாம்னு பார்த்தா, இந்த anonymous உங்கள மட்டுமில்லாம படிக்கிரவனையும் நக்கலடிச்சுட்டு போயிட்டாரே…

    எது எப்படியோ நாள் பூரா காத்துகெடந்ததுக்கு பிரியாணியும் சிக்கனும்னா சும்மாவா… ஆமா..அடுத்த நாள் அந்த தயிர் சாதம்தானே lunchக்கு.. (நாம தஞ்சாவூர் இல்லையா, சோற்றை வீணாக்கமாட்டோமே)

    நிந்நில்

  3. //இதெல்லாம் நேரக்கெடு. எழுதரவனுக்கும் சரி.படிக்கிரவனுக்கும் சரி. எதாவது உருப்படியா பண்ணுங்க சார்.//

    repeatuu

  4. வாங்க ஜெய்சங்கர் அண்ணா, போயும் போயும் ஒரு அனானிக்கு ரிப்பீட்டு போடுற அளவுக்கு ஒங்க நெலம மோசமாயிருச்சேன்னு நெனைக்கும்போது வருத்தமாத் தான் இருக்கு.

    நிதில், மறுநாள் தண்ணி ஊத்துன சோறும் பச்சை வெங்காயமும் தான். தஞ்சாவூர்க்காரங்க என்னைக்கு சாப்பாட்ட வீணாக்கிருக்கோம்.

  5. யோவ் அதான் ஒரு நாள் சாப்பாட்ட ஒரே நேரத்துல வெட்டு வெட்டுனு வெட்டிட்டல… அதுகப்புறம் என்ன எனக்கு மட்டும் ஏன் இப்படி… என்னமோ இவர எல்லோரும் திட்டம் போட்டு பட்டினி போட்ட மாதிரி ‘பில்ட் ஆப்’.

    //நமக்கு வரலாறு முக்கியம்//

    இவரு பெரிய புலிகேசி… சொல்லிட்டாரு….

    //repeatuu//

    நானும் ரிப்பீட்டுகிறேன்….

  6. விஜய், உங்க இந்த தொடர் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. எள்ளலும், துள்ளலுமாய் அழகான நடை. அனானிகளைப் பற்றிக் கவலைப்படாமல் இதே போல் நிறைய எழுதுங்கள். உளமார வாழ்த்துகிறேன்.

  7. Nalla thunnuttu .. imma periya build up vera… nice writing!

  8. Vijay…Naan ungaloada ella writings iyaum padichaen..its fantastic..Please continue u’r writings…


பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.